பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பிலிருந்து ஜிகே மணியை நீக்கிவிட்டு அன்புமணி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனை சட்டபேரவை செயலாளர் ஏற்க வேண்டும் என பாமகவின் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் மனு அளித்துள்ளனர்.
எதிர்வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பாட்டாளி மக்கள் கட்சியின் குழு தலைவர் இருக்கையை அன்புமணி ராமதாஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கு ஒதுக்க வேண்டும் என சட்டமன்ற செயலாளரிடம் அன்புமணி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த சில மாதங்களாக உட்கட்சி குழப்பம் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் அன்புமணி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மேட்டூர் சதாசிவம், வெங்கடேசன், சிவகுமார் ஆகியோர் நேரில் மனு அளித்தனர்.
அதில் நேற்று அன்புமணி தலைமையில் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் தற்போது பாமகவின் சட்டப்பேரவை குழு தலைவராக உள்ள ஜிகே மணியை பொறுப்பில் இருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக எஸ்பி.வெங்கடேஸ்வரன் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும், மேலும் பாமகவின் கொறடா பதவியில் இருந்து சேலம் சட்டமன்ற பாமக உறுப்பினர் அருள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக மயிலம் தொகுதி சட்டமன்ற பாமக உறுப்பினர் சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு மனு அளிக்கப்பட்டது.
இதனை சட்டப்பேரவையில் ஆவணங்களில் மாற்றம் செய்து உரிய ஆணைகளை விரைந்து சட்டப்பேரவை செயலாளர் பிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.