பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவருடைய மகனும் அக்கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல், நேற்று வெட்டவெளிச்சமாக வெளிப்பட்டது. தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார். இதற்குப் பதிலளிக்காத அன்புமணி, சென்னை சோழிங்கநல்லூரில் மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்தார். அவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர்கள் மத்தியில் பேசிய அவர், “எனக்குச் சொந்த வீடு தி.நகரில் உள்ளது. இந்தப் பகுதியில் இருப்பது வாடகை வீடுதான். அதனால், தி.நகர் பகுதி செயலாளரிடம்தான் புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டை நான் பெற்றேன்.
உலகமே பாராட்டக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய மாநாட்டை நாம் நடத்தினோம். அந்த மாநாட்டை, நான் நடத்தவில்லை நீங்கள்தான் நடத்தினீர்கள். அந்த மாவட்டப் பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வெற்றிகரமாக நடத்தினார்கள்.
நீங்கள் நினைத்தால்தான் எங்களை நியமனம் செய்ய முடியும்; நீக்க முடியும்; அதுதான் நம் கட்சியின் விதி. இன்று, காலையில், நம் கட்சியின் பொருளாளர் திலகபாமாவை கட்சியில் இருந்து நீக்கினார்கள். உடனடியாக, நான் அவர் கட்சியில் தொடர்வார் என்று அறிவித்துவிட்டேன். ஏனென்றால், பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர் திலகபாமா” என்றார்.
தொடர்ந்து அவர், “அதேபோல் விழுப்புரம் மாவட்டச் செயலாளரை நீக்கி இருக்கிறார்கள். அவரும் அதே பதவியில் தொடர்வார். யார் நீக்கப்பட்டாலும் கவலை வேண்டாம்; நீக்கப்பட்ட அடுத்த நிமிடமே நியமனக் கடிதம் அனுப்புவேன். என்னுடைய கடிதம் மட்டுமே செல்லும்.
இப்போது உள்ள இந்த டீமை வைத்துத்தான் நான் மாநாட்டை வெற்றிகரமாக முடித்தேன். இந்த டீமை வைத்துத்தான் நாம் ஆட்சிக்கு வரப் போகிறோம். ஆனால், இந்த டீமைக் கெடுக்கவும் குழப்பத்தை ஏற்படுத்தவும் சூழ்ச்சி நடைபெற்று வருகிறது. பாமகவில் நிலவும் குழப்பங்கள் தற்காலிகமானவை. தற்போதைய குழப்பங்கள் சரி செய்யப்படும். அதை நான் சரி செய்துவிடுவேன். பாமக உள்ள கூட்டணியே வெற்றிபெறும்.
அதுபோல வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக இடம்பெற்றுள்ள கூட்டணியே வெற்றி பெறும். நான் எத்தனையோ பதவிகளைப் பார்த்துவிட்டேன். என்னைத் தலைவனாக எண்ணவில்லை. தலைமைத் தொண்டனாகவே இருக்கிறேன். மனதில் நிறைய உள்ளன. ஆனால் பேச முடியவில்லை. என் கடிதம்தான் செல்லும். நேற்றுதான் எனக்கு விடுதலை கிடைத்தது.
இனி, நாம் வேகமாகச் செல்லலாம். எந்தத் தடை வந்தாலும் அதை உடைத்தெறிந்து முன்னேறுவோம். பாமகவை அடுத்தகட்டத்துக்கு நாம் கொண்டு வருவோம். நமக்கு இருந்து தடைகள் நேற்று முதல் அகன்று விட்டன. இன்னும் 10 மாதங்களில் தேர்தல் வருகிறது. உறுப்பினர் அடையாள அட்டைகளைப் புதுப்பிக்கும் பணிகளை 3 வாரங்களில் முடிக்க வேண்டும். பாமகவில் உண்மையான உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும்” எனப் பேசினார்.