பாட்டாளி மக்கள் கட்சியில் மருத்துவர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், ராமதாஸ் அணி - அன்புமணி அணி என இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது கட்சி.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தந்தையும், மகனும் இணைந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அன்புமணி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார் ராமதாஸ். அதேபோல வயதாகிவிட்டதால் ராமதாஸ் குழந்தையைப் போல பேசுகிறார் என வெளிப்படையாக விமர்சித்தார் அன்புமணி.
அதையடுத்து பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலை எதிர்கொண்டார் அன்புமணி. அதேபோல சசிகலாவுடன் கூட்டணி அமைத்து களத்தில் குதித்தார் ராமதாஸ். போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது ராமதாஸ் அணி.
அதேசமயம் நடிகர் விஜயின் தாக்கத்தையும் மீறி, பா.ஜ.க கூட்டணியில் போட்டியிட்ட அன்புமணி அணி, செஞ்சி, விக்கிரவாண்டி, தர்மபுரி, ஜெயங்கொண்டம் என நான்கு தொகுதிகளில் வெற்றிபெற்றது.
அதன்பிறகு இரண்டு அணிகளும் ஒன்றிணையும் என்று எதிர்பார்த்தனர் தொண்டர்கள். ஆனால் அப்படி எதுவும் நடைபெறாததால், பா.ம.க-வில் அன்புமணியின் கை ஓங்கியது. அதனால் ராமதாஸ் அணியில் இருப்பவர்கள், அன்புமணியின் பக்கம் தாவுவதற்கு ரூட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையில் உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து `ஆக்டிவ்' தலைவராக வலம் வரும் அன்புமணி, முதல்வர் விஜய்யை சந்தித்து ஆட்சி சிறப்பாக நடைபெறுவதாகப் பாராட்டினார். இந்த நிலையில்தான் இன்று மதியம் அன்புமணி தன்னுடைய மனைவி சௌமியா மற்றும் மகள்களுடன் தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்றிருக்கிறார்.
ராமதாஸ் மற்றும் அவரது மனைவி ஸரஸ்வதியின் 61 வது திருமண நாளை முன்னிட்டு பெற்றோரிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்காக குடும்பத்துடன் சென்ற அவர் அன்புமணியை பார்த்த சந்தோஷத்தில் இரண்டு, மூன்று நிமிடங்கள் ஆரத்தழுவி கட்டி அணைத்து அழுதிருக்கிறார் ராமதாஸ். நீண்ட மோதல்களுக்கு பிறகு ஏற்பட்ட இந்த சந்திப்பு பாமக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியதோடு, உட்கட்சி பிரச்சனைகள் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.
சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி இனி நல்லது நடக்கும் எனத் தெரிவித்திருக்கிறார்.