பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணியுடன் ஏற்பட்ட சமரசத்துக்குப் பிறகு, தனது 88வது பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் 88 மரக்கன்றுகள் நடவு செய்து, அதனை அரசியல் துறவற அறிவிப்புடன் இணைத்தார். இனி அரசியல் விவகாரங்களில் ஈடுபடாமல், கட்சியின் பொறுப்பை அன்புமணிக்கு ஒப்படைக்கிறார். தன்னைச் சந்திக்க வருபவர்கள் அரசியல் பேசாமல் நல விசாரிப்புக்கு மட்டும் வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் மோதல் போக்கு இருந்து வந்த நிலையில், கடந்த மாதம் 24ஆம் தேதி ராமதாஸின் திருமண நாளை முன்னிட்டு மருத்துவர் அன்புமணி, செளமியா அன்புமணி தனது குடும்பத்துடன் தைலாபுரம் இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது உணர்ச்சிபொங்க அப்பா, மகன் இருவரும் அன்பை வெளிப்படுத்திய நிலையில், பாமகவில் இருவருக்குள் இருந்த பிரச்சனை சுமுக முடிவினை எட்டி பிரச்சனை முடிவிற்கு வந்தது. அதன் பின்னர் பாமக தலைவராக தன்னை அறிவிக்ககோரி ராமதாஸ் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கினை வாபஸ் வாங்கினார்.
இந்நிலையில் ராமதாஸின் 88ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பாமக தலைவர் அன்புமணி தர்மபுரி எம்எல்ஏ செளமியா அன்புமணி, மூன்று மகள்கள் பேரக்குழந்தையுடன் அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸை சந்தித்து ஆசி பெற்றனர். அதன் பின்னர் குடும்பமாக அன்புமணி ராமதாஸ், மருத்துவர் ராமதாஸ் கோனேரிக்குப்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 88 மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
இந்தநிலையில் தான் நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், தன்னுடைய 40 ஆண்டுகால அரசியல் பயணம் முடிவுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "எனது 88வது வயதில் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். அரசியல் துறவறம் என்று சொன்னால், இன்று முதல் அரசியல் பேச மாட்டேன். அரசியலில் தலையிட மாட்டேன். இனி அரசியலை அன்புமணி பார்த்துக் கொள்வார். என்னை காண வரும் அனைவரையும் பார்ப்பேன். வருபவர்கள் என்னிடம் நலம் விசாரிக்கலாம். நானும் நலம் விசாரிப்பேன். அரசியல் பேச வேண்டாம். என்னை இனி தொந்தரவு செய்ய வேண்டாம்" என்று கூறியுள்ளார்.