பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ்-க்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, பாமகவில் கடந்த ஓராண்டுகளுக்கு மேலாகவே உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. இந்நிலையில், பாமக தற்போது இரு தரப்புகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. மேலும், பாமக எங்களிடமே இருக்கிறது என இரு தரப்பில் இருந்துமே உரிமை கொண்டாடி வரும் சூழலில், கடந்த நவம்பர் மாதம் 18 - ஆம் தேதி தேர்தல் ஆணையம், ராமதாஸ் தரப்புக்கு எழுதியிருந்த கடித்தத்தில் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை அன்புமணி ராமதாஸ் பாமகவின் தலைவராக செயல்படுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இது, ராமதாஸ் தரப்பு பாமகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், உட்கட்சிப்பூசல், 2026 சட்டமன்றத் தேர்தல் ஆகிய நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்று சேலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தில் பங்கேற்க, மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் என 4700 பேர் அடையாள அட்டையுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல நெருக்கடிகளுக்கிடையே நடைபெறும் இந்தக் கூட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சித் தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாமக செயல்தலைவராக ஶ்ரீகாந்தியும், கௌரவத் தலைவராக ஜிகே மணியும், பொதுச்செயலராக முரளிசங்கரும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். அதேபோல், பாமக பொருளாளராக சையத் மன்சூர் உசேனை தேர்வு செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. வேட்பாளர்களை தேர்வு செய்யும் அதிகாரமும் ராமதாஸுக்கு வழங்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. குறிப்பாக பசுமை தாயகம் அமைப்பின் தலைவராக ஶ்ரீகாந்தி நியமனம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பாமக செயல் தலைவர் ஶ்ரீகாந்தி பேசுகையில், பாமகவுக்கு தற்போது நல்ல சகுணம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இக்கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக பேசிய பாமக கௌரவத் தலைவர் ஜி.கே மணி, “2026 ஆம் ஆண்டினை வரவேற்கும் விதமாகவும், சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கும் முழு அதிகாரம் மருத்துவர் ராமதாசுக்கு இக்கூட்டத்தில் வழங்கப்படவுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
தொடர் நேரலை