அன்புமணி ராமதாஸ் புதிய தலைமுறை
தமிழ்நாடு

அன்புமணி ஆலோசனை.. திலகபாமா நீக்கம்.. பாமகவில் அடுத்தடுத்து திருப்பம்!

பாமக பொருளாளர் பொறுப்பிலிருந்து திலகபாமா நீக்கப்பட்டிருப்பதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக சையது மன்சூர் நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Prakash J

பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவருடைய மகனும் அக்கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல், நேற்று வெட்டவெளிச்சமாக வெளிப்பட்டது. தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார். இதற்குப் பதிலளிக்காத அன்புமணி, இன்று மாவட்டச் செயலாளர்களைச் சந்திப்பதாகத் தெரிவித்திருந்தார். சொன்னபடியே இன்று சோழிங்கநல்லூரில் மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்தார். 23 மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 22 பேர் வருகை புரிந்திருந்தனர்.

அப்போது பேசிய அன்புமணி, “பொதுக்குழுவில் நீங்கள்தான் என்னைத் தலைவராகத் தேர்வு செய்தீர்கள். நமக்குள் வேற்றுமைகள் இருக்கக்கூடாது. ராமதாஸின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த நாம் வேகமாக இறங்குவோம். உங்களில் ஒருவனாக, முதல் தொண்டனாக நான் இறங்கி நிற்கிறேன்” எனத் தெரிவித்த அவர், ”எதிர்பார்த்து ஏமாற வேண்டாம். கட்சி விவகாரம் குறித்து விவாதிக்க இருக்கிறோம். விரைவில் செய்தியாளர்களைச் சந்திக்கிறேன்” எனச் சொல்லி ஊடகவியலாளர்களை வெளியேறும்படி கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே பாமக பொருளாளர் பொறுப்பிலிருந்து திலகபாமா நீக்கப்பட்டிருப்பதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக சையது மன்சூர் உசேன் நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ராமதாஸால் திலகபாமா கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர் அப்பதவியில் தொடருவார் என அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “பாமக பொதுக்குழு என்னை முறைப்படி தேர்வு செய்து தலைவராக தேர்தல் ஆணையம் என்னை அங்கீகரித்துள்ளது. பாமகவில் நிர்வாகிகளை நியமிக்க நீக்க தலைவரான எனக்கே அதிகாரம் உள்ளது. பாமக பொருளாளர் பதவியில் திலகபாமாவே நீடிப்பார்” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.