பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தவெக-வுடன் கூட்டணி அமைப்பது குறித்து முக்கிய நிர்வாகிகள் விவாதித்தனர். திமுக, அதிமுக கூட்டணியில் இணைய முடியாத சூழலில், பாமக 35 பகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறது என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாமக கௌரவத் தலைவர் ஜிகே.மணி. செயல்தலைவர் ஸ்ரீகாந்தி. பொதுச் செயலாளர் முரளி சங்கர். பொருளாளர் செய்யத் மன்சூர்உசேன். இணைப்பொதுச் செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான அருள். தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் இணைய முடியாத சூழலில் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாமக, தவெக-வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக இந்த ஆலோசனைகூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக-வுடன் கூட்டணி ஏற்படும் சூழலில் பாமக போட்டியிடவுள்ள 35 பகுதிகளில் உள்ள முக்கியபொறுப்பாளர்கள் அழைக்கப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் ஏறத்தாழ அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதிசெய்துள்ள நிலையில் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாமக யாருடன் கூட்டணி என்பது இன்னும் முடிவுசெய்யப்படாமல் உள்ளது.