தமிழ்நாடு

“மும்பை தாக்குதலிலும் காங்கிரஸ் அரசியல் செய்தது” - மோடி குற்றச்சாட்டு

webteam

மும்பை தாக்குதலுக்கு பதிலடி கொடுத்ததைக்கூட காங்கிரஸ் கட்சி சந்தேகித்ததாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய வரலாற்றில் எப்போதும் காணாத வகையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் 3 நாட்கள் நீடித்தது. இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய, 166 பேர் உயிரிழக்கக் காரணமான இந்தப் பயங்கரவாத தாக்குதல் நீங்கா வடுவாக இன்னும் இருக்கிறது. 166 பேர் கொல்லப்பட்ட மும்பை தீவிரவாத தாக்குதலின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

இதனையடுத்து ராஜஸ்தானின் பில்வாராவில் பேரணி நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். மும்பை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா முயன்ற போது காங்கிரஸ் கட்சி அதிலும் அரசியல் செய்தது என்று அவர் குற்றம் சாட்டினார். மேலும் பேசிய அவர், 2008ம் ஆண்டு மும்பை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியாவே துக்கம் அனுசரித்துக்கொண்டு இருந்த அந்த நேரத்திலும் காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான் தேர்தலுக்காக பரப்புரையில் தீவிரமாக இருந்தது. மும்பை தாக்குதல் நடந்த இந்த நாளில் உலகமே அதிர்ந்தது. அதற்கு இந்தியா பதிலடி கொடுக்கும் விதத்தில் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியது. ஆனால் காங்கிரஸ் கட்சி அதையும் சந்தேகித்தது. வீடியோ ஆதாரத்தை கேட்டது என்று தெரிவித்தார்.

மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களும், அதற்கு மூளையாக செயல்பட்டவர்களும் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் மீது அந்நாட்டு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் இந்தத் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும், தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்தார். அதன்படி சர்ஜிகல் ஸ்டிரைக் என்ற தாக்குதலும் நடத்தப்பட்டது. 

இந்நிலையில் மும்பை தாக்குதல் நடைபெற்று 10 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இதுவரை பாகிஸ்தான் அரசு சட்டரீதியிலான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.