தமிழ்நாடு

பிரதமர் மோடி சென்னை வருவதில் தாமதம்

Sinekadhara

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கிவைக்க பிரதமர் நரேந்திர மோடி மாலை 5 மணியளவில் சென்னை வருகிறார்.

சென்னை அருகே மாமல்லபுரத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் செஸ் ஒலிம்பியாட் இன்று தொடங்க உள்ளது. பிரதமர் மோடி தொடங்கிவைக்க உள்ள இந்தப் போட்டியில், 187 நாடுகளில் இருந்து 2,100 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். 

மதிநுட்ப விளையாட்டான சதுரங்கத்தில் சர்வதேச அளவில் வல்லவர்கள் யார் என்பதை தீர்மானிக்கும் செஸ் ஒலிம்பியாட் சென்னை அருகே மாமல்லபுரத்தில் இன்று தொடங்குகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான சுடர் ஓட்டத்தை கடந்த மாதம் 19 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார். 75 நகரங்களுக்கு பயணித்த செஸ் ஒலிம்பியாட் சுடர் மாமல்லபுரம் வந்தடைந்தது. விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதனிடம் வழங்கப்பட்ட இந்தச் சுடர், சென்னை - நேரு உள்விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெறும் தொடக்க விழாவில் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை தொடக்கிவைக்க இன்று மாலை பிரதமர் மோடி சென்னை வருகிறார். ஆனால் அகமதாபாத்திலிருந்து 2.20 மணிக்கு பதில் 3.10 மணிக்கு பிரதமர் மோடி புறப்பட்டதால் பிரதமர் 4.45 மணிக்கு பதில் மாலை 5.10 மணிக்கு சென்னை வருவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் இந்த விழாவில் ஆளுநர் ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதனால் தொடக்கவிழா தாமதமாகும் என்பதால் நிகழ்ச்சி நிரலில் மாற்றங்கள் ஏற்படலாம் எனத் தெரிகிறது.