பிரதமர் மோடி படிக்கெட்டில் ஏறும்போது தவறி விழுந்ததில் காயம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய கங்கை ஆணையத்தின் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள கான்பூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர், உத்தரகாண்ட் முதலமைச்சர் மற்றும் பிகாரின் துணை முதலமைச்சர் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை.
இதற்கிடையே கூட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி, கட்டட வளாகத்தின் படிக்கெட்டில் ஏறிச்சென்றுக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி பாதுகாப்பு அதிகாரிகள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது படிகளில் ஒன்று மட்டும் சற்று உயரமாக இருந்தது. அதில் ஒரு பாதுகாப்பு வீரர் லேசாக தடுக்கிச் சென்றார். பின்னாடியே வந்த பிரதமர் மோடி, அந்தப் படிக்கட்டை தாண்டும் போது தடுக்கி விழுந்தார்.
இருந்தாலும் அவர் கைகளை தரையில் ஊன்றி மீண்டும் மேலே எழுந்தார். உடனே அவரைப் பாதுகாவலர்கள் தூக்க முனைந்தனர். இந்தச் சம்பவத்தால் மோடிக்கு எந்தக் காயம் ஏற்படவில்லை என்றும், அவர் பூரண நலமுடன் இருக்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.