சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா கோரிக்கை மனு தருவது போன்ற புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஜெயலலிதாவின் தொண்டர்கள் அவர் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெற அயராது உழைப்போம் என ஜெயலலிதாவின் 71ஆவது பிறந்தநாளில் அதிமுகவினர் வீர சபதம் ஏற்க வேண்டும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா கோரிக்கை மனு தருவது போன்ற புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. மேலும் மறைந்த பிரதமர் வாஜ்பாயிக்கு ஜெயலலிதா வணக்கம் செலுத்துவது போன்ற புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துள்ள நிலையில் அதிமுக அலுவலகத்தில் பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை அடுத்து அவரை புகழ்ந்து, பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.அதில் ஜெயலலிதா சிறந்த நிர்வாகி மற்றும் கருணை உள்ளம் கொண்டவர். அவர் கொண்டு வந்த திட்டங்களால் ஏழைகள் பலர் பயனடைந்துள்ளனர். தமிழக வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பங்கு தலைமுறைகள் தாண்டி நினைவில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.