பல்வேறு அரசு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு இன்று வந்து சேர்ந்தார்.
பிரதமர் மோடி கடந்த மாதம் மதுரை மாநாட்டில் கலந்து கொள்ளவும், எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்காகவும் தமிழகம் வந்தார். பின் திருப்பூர் வந்த பிரதமர் மோடி, பாஜக மாநாட்டில் கலந்து கொண்டார். இந் நிலையில் பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வந் துள்ளார்.
விசாகப்பட்டினத்தில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார். அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்படி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தம்பிதுரை எம்.பி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் உட்பட பலர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து அரசு விழா நடைபெறும் இடத்துக்கு பிரதமர் மோடி காரில் சென்றார்.
இந்த விழாவில், மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலைக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். பணகுடி-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை, மார்த்தாண்டம், பார்வதிபுரம் மேம்பால திறப்பு ஆகிய விழாவிலும் அவர் கலந்து கொள்கிறார். தமிழக அரசு சார்பில் நடக்கும் இந்த விழாவில் அதிமுக - பாஜக கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.