சென்னை டி.எம்.எஸ்- வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி திருப்பூரில் இருந்து தொடங்கி வைத்தார்.
திருப்பூரில் இன்று பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி, ஆந்திராவில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உற்சாக வரவேற்பு அளித்தார். இதனையடுத்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூருக்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். இதனையடுத்து பெருமாநல்லூரில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், சென்னை டி.எம்.எஸ்- வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி திருப்பூரில் இருந்து தொடங்கி வைத்தார். அத்துடன் திருப்பூரில் 100 படுக்கைகள் கொண்டை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த மருத்துவமனை மூலம் சுமார் 1.22 லட்சம் தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறுவார்கள். இதனையடுத்து சென்னை விமான நிலைய 2-ஆம் கட்ட நவீனமயமாக்கல் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதேபோல திருச்சி விமான நிலையத்தின் 2-வது முனையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தற்போது பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.