தமிழ்நாடு

இன்று தொடங்குகிறது ப்ளஸ் டூ பொதுத்தேர்வு

இன்று தொடங்குகிறது ப்ளஸ் டூ பொதுத்தேர்வு

webteam

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கும் ப்ளஸ் டூ பொதுத் தேர்வையொட்டி, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 6,737 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 8,98,763 மாணாக்கர் தேர்வெழுதவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் மாணவியர் 4,80,837 பேர் ஆவர். மாணவர்கள் 4,17,994 பேர் மற்றும் ஒரு திருநங்கை ஆவார். இவர்களைத்தவிர, சிறைக்கைதிகள் 98 பேரும் தேர்வு எழுதுகின்றனர். பள்ளி மாணவர்களைத் தவிர 34,868 தனித்தேர்வர்களும் ப்ளஸ் டூ தேர்வை எழுதவுள்ளனர். தமிழ் வழியில் பயின்று தேர்வெழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 5,69,304 ஆகும். புதுச்சேரியில் 143 பள்ளிகளிலிருந்து 33 தேர்வு மையங்களில் 15,660 மாணாக்கர் தேர்வில் பங்கேற்கின்றனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2,434 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்விற்காக மொத்தம் 46,685 ஆசிரியர்கள் அறைக் கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்வு மையங்களை பார்வையிட சுமார் 4,000 பேர் கொண்ட பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மைய வளாகத்திற்குள் தேர்வர்களும், ஆசிரியர்களும் அலைபேசி எடுத்து வர தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தேர்வு மையங்களில் தேர்வர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் கடுங்குற்றமாகக் கருதி தண்டனை வழங்கப்படும். ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவே, ஊக்குவிக்கவோ முயற்சித்தால் சம்பந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.