அடுத்த 10 வருடங்களில் 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் அனைவரும் மரங்களை நட வேண்டுமென அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
பருவ மழை பொய்த்த நிலையில், தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. வறட்சி மற்றும் மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் சென்னை உட்பட பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. இதனால், தலைநகரமான சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மழை பெய்தால் மட்டுமே தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தீரும் என்ற நிலை வந்துவிட்டது. மழையை எதிர்நோக்கி மக்களும் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் அனைவரும் மரங்களை நட வேண்டும் வேண்டுமென அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் கைப்பட எழுதி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், ''அடுத்த 10 வருடங்களில் 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. பனிப்பாறைகள் உருகுகின்றன. நாம் அனைவரும் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக கைக்கோர்க்க வேண்டும். அனைவரும் மர நட வேண்டும்.
தண்ணீரை வீணாக்கக் கூடாது. ப்ளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவோ, தீயிட்டு எரிக்கவோ கூடாது. இதை பலருக்கும் பகிருங்கள். ஏனென்றால் நாம் ஒன்றினைந்தால் தான் உலக வெப்பமயமாதலை தடுக்க முடியும்'' என்று தெரிவித்துள்ளார்.