சென்னை பக்கிங்காம் கால்வாயில் அரை நூற்றாண்டிற்குப் பிறகு படகு போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை பக்கிங்காம் கால்வாயில் அரை நூற்றாண்டிற்குப் பிறகு படகு போக்குவரத்தை மீண்டும் தொடங்க சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது. இது குறித்த செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
சென்னையைப் பூர்வீகமாக கொண்ட 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களின் நினைவு அடுக்குகளில் பக்கிங்காம் கால்வாயில் படகில் பயணித்த கதைகள் இன்னும் மிச்சம் இருக்கின்றன.
பக்கிங்காம் கால்வாயில் 1934ஆம் ஆண்டில் புரட்சி கவிஞர் பாரதிதாசன் படகில் பயணித்திருக்கிறார் என்றும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1960களில் ஆந்திராவில் இருந்து மூலக்கொத்தளத்தில் உள்ள கருவாடுமண்டிக்கு இந்த பக்கிங்காம் கால்வாய் வழியாகத்தான் கருவாடுகள் கொண்டுவரப்பட்டன.
1962ஆம் ஆண்டு செப்டம்பரில் தி இந்து நாளிதழில் வெளியான ஒரு செய்தியினை படித்து பார்க்கும்போது அரிசி, விறகு, பருத்தி உள்ளிட்ட ஒரு லட்சத்து 47ஆயிரம் டன்பொருட்கள் பங்கிகாம் கால்வாய்வழியாக கையாளப்பட்டுள்ளன.
பக்கிங்காம் கால்வாயின் மொத்த நீளம் 467 கிலோ மீட்டராகும். இதில் 210 கிலோமீட்டர் தமிழ்நாட்டிலும், 257 கிலோ மீட்டர் ஆந்திராவிலும் அமைந்துள்ளது. இந்தகால்வாயானது ஆரணியாறு, கொரட்டாலியூர் ஆறு, ஓட்டேரி ஆறு, கூவம், அடையாறு, பாலாறு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன.
1876ஆம் ஆண்டு சென்னையில் பெரும் பஞ்சம்ஏற்பட்டது. அப்போது சென்னை பல்கலைக்கழக பின்புறம் இருந்து கிரீன்வேஸ் சாலை வரையில் 5 மைல்தூரத்துக்கு கால்வாய் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை வாழ்வியலோடு இணைந்த பங்கிகாம் கால்வாயை பொது போக்குவரத்தாக மேம்படுத்த போக்குவரத்து ஆணையமான CUMTA திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டமாக சென்னை சென்ட்ரலில் இருந்து முட்டுக்காடு வழியாக மாமல்லபுரம் வரை வாட்டர் மெட்ரோ திட்டம் தேசிய நீர்வள ஆணையத்திடம் சமர்பிக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து மாமல்லபுரம் வரை 40 கழிவு நீர் மறுசுழற்சி நிலையங்கள் மூலம் கழிவு நீரை மட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பக்கிங்ஹாம் கால்வாயை இரண்டு மீட்டர் வரை தூர்வாரி பராமரிக்க தனி அமைப்பையே ஏற்படுத்த உள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் இயக்குனர் ஜெயக்குமார் தெரிவிக்கிறார்.
நீர் வழி திட்டம் என்பதால் மத்திய அரசின் முழு ஒப்புதல் அவசியம் என்கிற காரணத்தினால் தேசிய நீர்வள ஆணையத்தின் ஆலோசனைப்படி இன்னும் ஐந்து வருடங்களுக்குள் இந்தத் திட்டத்தை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
செய்தியாளர் - பால வெற்றி வேல் நவநீதகிருஷ்ணன்.