தமிழ்நாடு

அர்ஜூன் சம்பத்தை கொலை செய்ய திட்டமா? : வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்

அர்ஜூன் சம்பத்தை கொலை செய்ய திட்டமா? : வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்

webteam

கோவையை சேர்ந்த இந்துமத தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக கைது செய்யப்பட்ட 5 பேரையும் வரும் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். 

கோவை வெரைட்டி ஹால் சாலை சுந்தரம் வீதி, சுங்குவார் சந்து பகுதியில் வசித்து வருபவர் ஆசிக். இவரை காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், ஆசிக்கை சென்னையிலிருந்து சந்திக்க 4 பேர் வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கடந்த 1ஆம் தேதி ரயில் மூலமாக வந்த 4 பேருடன், ஆசிக்கை பிடித்து வெரைட்டி ஹால் காவல்துறையினர் விசாரித்தனர். 5 பேரிடமும் மத்திய உளவுப்பிரிவினரும், சிறப்பு புலனாய்வு பிரிவினரான எஸ்.ஐ.யு.வும் விசாரித்தனர். 2 நாட்கள் நடந்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது. 

அதில், கைது செய்யப்பட்டவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர்களாகஈவும், ரகசிய உறுப்பினருமாக இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இஸ்லாம் மதத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருபவர்களை கண்காணித்து வந்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், கோவையை சேர்ந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், சக்திசேனா மாநில தலைவர் அன்புமாரி ஆகியோர் தொடர்ந்து இஸ்லாம் மதத்திற்கு எதிராக கருத்து பதிவிட்டு வருவதாக ஆசிக் 4 பேரிடமும் கூறியுள்ளார். இதனால், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இவர்கள் இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததும், அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய தற்போது வந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். 

இந்தக் கொலை சம்பவத்தை ஆட்டோ மூலம் நிகழ்த்தவும், அதற்கான ஆயுதங்களை வழங்கி உதவவும், நோட்டமிடவும் ஆசிக்கின் நண்பர்கள் உதவுவதாக தெரிவித்திருப்பதையும் வாக்குமூலத்தில் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். இவர்கள் 5 பேரும் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் மூலமாக நண்பர்கள் ஆகியுள்ளனர். இதையடுத்து, கோவையை சேர்ந்த ஆசிக், விழுப்புரம் மாவட்டதை சேர்ந்த இஸ்மாயில், சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக் அலி, சலாவுதீன், சம்சுதீன் ஆகிய 5 பேர் மீது 5 நபர்களுக்கு மேல் ஒன்றுக்கூடி சட்டவிரோதமாக செயல்படுவதற்கு சதி திட்டம் தீட்டுவது (143),  கூட்டு சதி (120 (பி)),  மற்றும் தடுப்புக்காவல் சட்டமான UAPA சட்டத்தின்படி  அரசுக்கும், பொதுமக்களுக்கும் சட்ட ஒழுங்கு பிர்சனையை ஏற்படுத்தக்கூடிய மத கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவது உள்ளிட்ட பிரிவுகளான 15,16,18,20,38 (2) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து  வெரைட்டி ஹால் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

இதனைதொடர்ந்து காவல்துறையினர் 5 பேரையும் கோவை முதலாவது மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும், 5 பேரையும் மீண்டும் 5 ஆம் தேதி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையில், வழக்கில் தொடர்புடைய ஆசிக்கின் நண்பர்களான கோவை குனியமுத்தூரை சேர்ந்த அன்வர், ஆட்டோ பைசல் ஆகிய இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.