தமிழ்நாடு

நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த ஆவின் நிர்வாக இயக்குநருக்கு பிடிவாரண்ட்

நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த ஆவின் நிர்வாக இயக்குநருக்கு பிடிவாரண்ட்

webteam

சேவை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இழப்பீடு வழங்கத் தவறிய காரணத்தால், ஆவின் நிர்வாக இயக்குநருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டு கோவை வடவள்ளியை சேர்ந்த அன்பழகன் என்பவர் ஆவின் வாடிக்கையாளர் அட்டையை வாங்கியுள்ளார். உரிய கட்டணம் செலுத்தி ஆவின் பால் வாடிக்கையாளருக்கான அட்டை பெற்ற போதிலும், அவரது பெயர் ஆவின் பால் விற்பனை சாவடியில் இல்லை. அன்பழகன் இது தொடர்பாக ஆவின் நிர்வாகத்திடம் முறையிட்டும் உரிய தீர்வு கிடைக்காததால் சேவை குறைபாடு எனக்கூறி கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி அன்பழகனுக்கு 5000 ரூபாய் நிவாரண தொகையும் ரூ.3000 வழக்கு செலவுக்கான தொகையையும் ஆவின் நிர்வாகம்  வழங்கிட நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இதுவரை ஆவின் நிர்வாகம் தீர்ப்பின்படி அன்பழகனுக்கு நஷ்ட ஈடு வழங்காததால், அன்பழகன் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதனையடுத்து நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி பாலச்சந்திரன் ஆவின் நிர்வாக இயக்குநருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.