திருச்சி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவிற்கு பின்புறம் குவியல் குவியலாக மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டிவைக்கப்பட்டுள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனையில், நாளொன்றுக்கு திருச்சி மட்டுமல்லாது அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். விபத்து, தற்கொலை முயற்சி, தீக்காயங்கள் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுவதுடன், அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், அவசர சிகிச்சை பிரிவிற்கு பின்புறமுள்ள பகுதியில் அதிக அளவிலான குப்பைகளும், குளுக்கோஸ் பாட்டில்களும், காலணிகளும், மருத்துவ கழிவுகளும் பாலிதீன் பைகளில் வைக்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது தரையிலும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன்,கொசுக்களும், ஈக்களும் அதிக அளவில் உள்ளது.
இதேபோல் எலும்பு முறிவு சிகிச்சை மற்றும் முடநீக்கியல் துறைக்கு பின்புறமும் சேதமடைந்த படுக்கைகள், தலையணைகள் மற்றும் குப்பைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு அப்புறப்படுத்தபடாமல் உள்ளது. இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனையில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்த மேலாளரிடம் கேட்ட பொழுது, “பொங்கல் விடுமுறை காரணமாக குப்பைகளை மாநகராட்சி வாகனங்கள் வரவில்லை. நேற்று வந்து குறைந்த அளவிலான குப்பைகள் எடுக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் குப்பைகளை அப்புறப்படுத்தி வருகின்றது. விரைந்து முழுவதும் அகற்றப்படும்” என தெரிவித்தார்.
கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ கழிவுகள் குவியல் குவியலாக சேர்த்து வைக்கப்பட்டுள்ளது நோய்தொற்று அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் திருச்சியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 495 ஆகும்.
- பிருந்தா