தமிழ்நாடு

மரணம் வரை கை கொடுக்காத மனிதம்... சாலையை கடக்க முயன்ற மாற்றுத்திறனாளி மூதாட்டி உயிரிழப்பு

நிவேதா ஜெகராஜா
மழையில் ஊர்ந்து சென்று சாலையை கடக்க முயன்ற மாற்றுத்திறனாளி மூதாட்டி மீது கார் மோதியதில் பரிதாபமாக அம்மூதாட்டி உயிரிழந்திருக்கிறார். 
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர பகுதியில் கடந்த சில மாதங்களாக ஆதரவற்ற மாற்றுத்திறனாளி மூதாட்டி ஒருவர் சுற்றித் திரிந்து வந்துள்ளார். இதனிடையே கடந்த 25.08.2021-ம் தேதி குடியாத்தம் - சித்தூர் சாலையில் உள்ள பிச்சனூர்பேட்டை அருகே, அந்த மாற்றுத்திறனாளி மூதாட்டி மழை பெய்து கொண்டிருக்கும் போதே நடக்க கூட முடியாமல் ஊர்ந்து சென்று சாலையை கடக்க முயற்ச்சி செய்துள்ளார். அப்போது அவரை பல வாகன ஓட்டிகள் கடந்து சென்றுள்ளனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக வேகமாக அங்கு வந்த கார் ஒன்று, மூதாட்டி மீது மோதி இழுத்து சென்றுள்ளது. மூதாட்டி மீது இடித்த பின்னர், கார் நிற்க்காமல் தப்பியோடியது.
அதுவரை வேடிக்கை பார்த்திருந்த பொது மக்கள், மூதாட்டியை கார் மோதியதை பார்த்து ஓடிச்சென்று அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ஆதரவற்ற மாற்றுத்திறனாளி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு மூதாட்டியின் உடலை குடியாத்தம் நகர காவல் துறையினரும், குடியாத்தம் நகராட்சி நிர்வாகத்தினரும் நல்லடக்கம் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த குடியாத்தம் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு சிசிடிவி காட்சிகளை வைத்து விபத்து ஏற்படுத்தி சென்ற காரையும், அதன் ஓட்டுநரையும் தேடி வருகின்றனர். 
விபத்து ஏற்படும் வரை சாலையில் ஊர்ந்து செல்லும் மூதாட்டியை பார்த்துக்கொண்டிருந்த அங்கிருந்த பொது மக்களோ, கடந்து சென்ற வாகன ஓட்டிகளோ மூதாட்டிக்கு உதவியிருந்தால் பரிதாபமான நிலையில் உயிரிழந்திருக்கமாட்டார். மனிதம், மரணம் வரை மூதாட்டிக்கு கை கொடுக்கவில்லை.