தமிழ்நாடு

`அன்றும் இன்றும்...!’- முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படங்கள் வெளியீடு

webteam

முக சிதைவால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட சிறுமி டான்யா முகம் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் புகைப்படத்தை மருத்துவமனை தரப்பு வெளியிட்டுள்ளது.

ஆவடி வீராபுரத்தை சேர்ந்த ஸ்டீபன்ராஜின் 9 வயது மகள் முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.தொடர்ந்து சமூகத்திலும் ஒதுக்கப்பட்ட குழந்தையாக பார்க்கப்பட்டு வந்தார்.இதனால் சிறுமி மற்றும் அவரது பெற்றோர் மிகவும் துன்பத்துக்கு ஆளாகினர். இது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. பின்னர் இது குறித்து தகவல் அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுமியின் சிகிச்சைக்கு நடவடிக்கை எடுக்கும்படி தமிழக பாலவளத்துறை அமைச்சர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி சிறுமி தான்யா கடந்த 17 ஆம் தேதி தண்டலம் சவீதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு கடந்த 23 ஆம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றது. 10 மருத்துவர்கள் தொடர்ந்து 10 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார்.அவரது உடல் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்ததால் சாதாரண வார்டுக்கு மாற்றன்பட்டார். தொடர்ந்து சாதாரண வார்டில் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த சிறுமியை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அமைச்சர் நாசரிடம் சிறுமி டான்யா, தனக்கு முகம் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக தெரிவித்திருக்கிறார். வரும் வெள்ளிக்கிழமையன்று டான்யா வீட்டிற்கு செல்லவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்றும் சிறுமி மகிழ்வுடன் அமைச்சரிடம் தெரிவித்திருக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தினமும் டான்யா உடல் நலம் குறித்து கேட்டு வருவதாக அமைச்சர் நாசர் சிறுமியிடம் கூறினார். இதனிடையே சிறுமி டான்யாவுக்கு சிகிச்சைக்கு முன் அவரது முகம் எப்படி இருந்தது சிகிச்சைக்கு பின் முகம் எப்படி உள்ளது என்பதை விளக்கும் வகையில் உள்ள புகைப்படத்தை மருத்துவமனை வெளியிட்டுள்ளது.

மருத்துவமனை வெளியிட்ட சிறுமியின் புகைப்படம்: