தமிழ்நாடு

கங்கைகொண்ட சோழபுரத்தில் 4ஆம் கட்ட அகழாய்வு: வரலாற்றுப் பொக்கிஷங்கள் கிடைக்க வாய்ப்பு

webteam

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்று வரும் 4ஆம் கட்ட அகழாய்வில், கூரை ஓடுகள், செம்புக் காசுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன.

சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மாமன்னன் ராஜேந்திர சோழனால் தலைநகரமாக உருவாக்கப்பட்ட பகுதி தான் கங்கைகொண்ட சோழபுரம். 226ஆண்டுகள் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைநகராக விளங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம் என்பதால், அவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த அரண்மனைகள், செப்பேடுகள்,பயன்படுத்தப்பட்ட பொருட்கள் போன்ற வரலாற்றுப் பொக்கிஷங்களை கண்டறிவதற்கான அகழாய்வுப் பணிகள் தான் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொல்லியல் துறை மூலம் அகழாய்வு செய்வதற்கான இடம் தேர்வு செய்யப்படும் பணிகள் நடைபெற்றது. இதையடுத்து மாளிகைமேடு பகுதியில் 4ஆவது கட்டமாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. தொல்லியல் துறையைச் சார்ந்த 4பேர் கொண்ட குழுவினர் தலைமையில் 35தொழிலாளர்கள் அகழாய்வுப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆராய்ச்சியில், கூரை ஓடுகள், பானை ஓடுகள், இரும்பிலான பொருட்கள், செம்புக் காசுகள் ஆகியவை கிடைக்கப்பெற்றுள்ளன.

செப்டம்பர் மாதம் வரை இந்த ஆய்வுப் பணிகள் நடைபெறவுள்ள நிலையில், ஆய்வின் முடிவில் சோழர் கால வரலாற்றுப் பொக்கிஷங்கள், சீனா மற்றும் தெற்காசிய நாடுகளுடன் மேற்கொண்ட வணிகம் தொடர்புடைய பொருட்களும் கிடக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜேந்திரசோழனின் அரண்மனைப் பகுதிகள் மற்றும் அவற்றின் அமைப்பு குறித்து விரிவாக அறிவதற்கு, அதிக நிதி ஒதுக்கீடு செய்து 40க்கும் மேற்பட்ட இடங்களில் அகழாய்வுப் பணிகளை விரிவுபடுத்த வேண்டும் என்கின்றனர் வரலாற்றாய்வாளர்கள்.