தமிழகத்தின் கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 45 கிராமங்களை பெட்ரோலியம், வேதிப்பொருட்கள் மற்றும் பெட்ரோ வேதிப்பொருட்கள் முதலீட்டு மண்டலமாக வரையறுத்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர், புவனகிரி, சிதம்பரம் வட்டத்திலுள்ள 25 கிராமங்களும் நாகை மாவட்டத்திலுள்ள சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள 20 கிராமங்களும் முதலீட்டு மண்டல பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளின் மொத்த பரப்பளவு சுமார் 23 ஆயிரம் ஹெக்டேர்களாகும். இப்பகுதிகளில் ரயில், சாலை உள்ளிட்ட கட்டமைப்பு மேம்பாட்டுக்காக மத்திய அரசு 1,146 கோடி ரூபாயை ஒதுக்க உள்ளது.
தமிழகம் தவிர குஜராத், ஆந்திரா, ஒடிஷா ஆகிய மாநிலங்களிலும் பெட்ரோலிய முதலீட்டு மண்டலங்கள் அமைக்கப்படும் என்று 5 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு தெரிவித்திருந்தது.