சீர்காழி நகர் பகுதியில் தொடர்ந்து வந்த பெட்ரோல் திருட்டு சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலமாகியுள்ளது.
சமீப காலமாக பெட்ரோலின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், நாகை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியில் இருசக்கர வாகனங்களில் தொடர்ந்து பெட்ரோல் மாயமாகி கொண்டே இருந்ததாக தெரிகிறது.
இரவு பணி முடிந்து வீட்டுக்கு வரும் போது பெட்ரோல் நிரப்பி வந்தாலும் அடுத்த நாள் காலை பெட்ரோல் குறைந்திருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பல வீடுகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தி கண்காணித்து வந்தனர்.
அப்போது சீர்காழி புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் உள்ளே வரும் மர்ம நபர் ஒருவர் அங்கு நிறுத்தபட்டிருக்கும் 5 இருசக்கர வாகனங்களில் அடுத்தடுத்து பெட்ரோலை திருடிச்செல்லும் காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகி இருந்தது.
அதனை அறிந்த குடியிருப்பு வாசிகள் சிசிடிவி காட்சிகளுடன் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.