தமிழ்நாடு

பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பெட்ரோல்,டீசல்: தமிழக அரசு ஏற்பாடு

பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பெட்ரோல்,டீசல்: தமிழக அரசு ஏற்பாடு

webteam

புயல் பாதித்த மாவட்டங்களுக்கு தேவையான டீசல் மற்றும் பெட்ரோல் அனுப்ப தமிழக அரசு ஏற்பாடு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகின. குறிப்பாக வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை அதிக பாதிக்குப்புக்கு உள்ளாகியுள்ளன. கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். அதோடு, தங்களது வாழ்வாதாரங்களை இழந்து வாடுகின்றனர். 

கஜா புயல் அதிகம் பாதித்த பகுதியில் பெட்ரோல் பங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த பெட்ரோல் பங்குகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.பெட்ரோல் இல்லாததால் பொதுமக்கள் தங்களது தேவைக்குக்கூட வாகனங்களை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். ஏதாவது ஒரு இடத்தில் பெட்ரோல் கிடைத்தாலும் பெட்ரோல் பங்குகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். 

இந்நிலையில் புயல் பாதித்த மாவட்டங்களுக்கு தேவையான டீசல் மற்றும் பெட்ரோல் அனுப்ப தமிழக அரசு ஏற்பாடுசெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவன பொது மேலாளருடன் தமிழக அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி பெட்ரோல் டீசல் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் இணைப்புகள் இல்லாததால், ஜெனரேட்டர்களை இயக்குவதன் மூலமாகவே பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு போதிய டீசல் இல்லை என்பதால், புயல் பாதித்த மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து பெட்ரோல் டீசலை அனுப்ப இந்தியன் ஆயில் நிறுவனத்தை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. 

புயல் பாதிப்புகுள்ளான மாவட்டங்களில் இருக்கும் பெட்ரோல் நிரப்பும் நிலையங்களை கணக்கில் கொண்டு பெட்ரோல் டீசல் அனுப்பப்பட்டு வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.