தமிழ்நாடு

மெல்ல உயரும் பெட்ரோல், டீசல் விலை

மெல்ல உயரும் பெட்ரோல், டீசல் விலை

rajakannan

பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வோ, குறைவோ பெரியதாக கவனிக்கப்பட்டு வந்த நிலை மாறி, தினசரி விலை நிர்ணய முறையில்,
வித்யாசத்தை உணர்வது குறைந்திருக்கிறது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த 50
நாட்களில் டீசல் விலை 4 ரூபாய் 32 உயர்ந்துள்ளது.

இரு மாதங்களில் கணிசமான உயர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி டீசல் விலை லிட்டருக்கு 61 ரூபாய் 51 காசுகளாக இருந்தது.
டிசம்பர் 22 ஆம் தேதி இந்த விலை 62 ரூபாய் 5 காசுகளாகவும், ஜனவரி 3 ஆம்தேதி 63 ரூபாய் 3 காசுகளாகவும் இருந்தது. ஜனவரி 10
ஆம்தேதி 64 ரூபாய் 9 காசுகளாகவும், 19 ஆம் தேதி 65 ரூபாய் 83 காசுகளாகவும் இருக்கிறது. அதாவது கடந்த 50 நாட்களில் டீசல்
விலையில் லிட்டருக்கு 4 ரூபாய் 32 காசுகள் விலை உயர்ந்துள்ளது.

இதேபோல, பெட்ரோல் விலையை பொறுத்தவரை கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி லிட்டருக்கு 71 ரூபாய் 74 காசுகளாக இருந்தது.
டிசம்பர் 22 ஆம் தேதி 72 ரூபாய் 3 காசுகளாகவும், ஜனவரி 8 ஆம் தேதி 73 ரூபாய் ஒரு காசாகவும், 17 ஆம் தேதி 74 ரூபாய் 02
காசுகளாகவும் இருந்தது. ஜனவரி 19 ஆம் தேதி நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 74 ரூபாய் 35 காசுகளாக உள்ளது. கடந்த 50
நாட்களில் பெட்ரோல் விலை 2 ரூபாய் 61 காசுகள் என்ற அளவில் உயர்வு கண்டுள்ளது.

விலை நிலவரத்தில் மாற்றம் கண்ட தேதிகளில் மட்டுமே இந்த விலை நிலவரம் கணக்கிடப்பட்டுள்ளது. டீசல் விலையில் ஏற்பட்டுள்ள
விலை உயர்வு காய்கறி, மளிகை உள்ளிட்டவற்றின் விலையிலும், பயணக்கட்டணத்திலும் எதிரொலிக்கிறது. இந்த சுமை
சாமான்யர்களையே பாதிப்பதாக குரல்கள் எழுந்துள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து இந்த விலை மாற்றங்கள் இருப்பதாக சொல்லப்பட்டாலும், சர்வதேச
சந்தையின் விலை ஏற்றத்தின்போது அமல்படுத்தப்படும் விலை உயர்வு, விலை சரிவின்போதும் மக்களுக்கு பலனளிக்கிறதா என்ற
கேள்வியை எழுப்பும் வாடிக்கையாளர்கள், பெட்ரோல், டீசல் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை
விடுக்கிறார்கள்.