பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் ஒருநாள் நாடுதழுவிய வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது.
பெட்ரோல் டீலர்களுக்கான தரகுத் தொகையை உயர்த்த வேண்டும், பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நாடுதழுவிய ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தை பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.
50ஆயிரத்திற்கும் அதிகமான பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக இருந்த நிலையில், அதனை கைவிடும்படி எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.
இந்த ஆண்டு மட்டும் 3 முறை தரகுத் தொகை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது நியாயமில்லை என்றும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்திருந்தன. அதனையும்மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், வேலைநிறுத்த அறிவிப்பை கைவிடுவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.