தமிழ்நாடு

குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

webteam

குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கில் கைதான 10 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீடு உள்ளது. கடந்த ஜனவரி 26 ஆம் தேதி அதிகாலை சுமார் 03.15 மணி அளவில், மொத்தம் மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த 6 நபர்கள் இவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்தனர். அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் மர்ம நபர்களை துரத்தவே, அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அதனை அடுத்து அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இதனிடையே ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கில் தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த 10 பேரை மயிலாப்பூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அந்த 10 பேர் மீதும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளார்.