பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி விற்பனையில் தினமும் 1,380 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. இதை சமநிலைப்படுத்த மத்திய அரசு படிப்படியாக விலை உயர்த்தி வருகிறது. தற்போது லிட்டருக்கு ரூ.2.46–2.57 வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் மேலும் உயர வாய்ப்பு இருந்தாலும், அமெரிக்கா–ஈரான் பதற்றம் குறைந்தால் விலை நிலைநிறுத்தம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது..
அமெரிக்கா ஈரான் இடையே கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கிய போர் சுமார் 1 மாதம் நீடித்தது. இந்த போரின் தொடர்ச்சியாக ஈரான் உலகின் முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்து தடமான ஹோர்முஸ் நீரிணையை முடக்கியது. இந்த நிலைமையைச் சமாளிக்க வெனிசுலா மற்றும் ரஷ்யா ஆகிய இடங்களில் இருந்து கூடுதல் விலைக்கு இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தன. அதே நேரம் 5 மாநில சட்டசபை தேர்தல் காரணமாக சந்தையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவும் மத்திய அரசு விரும்பவில்லை.
இந்தசூழலில் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலமும், முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்வதைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருந்தார். மேலும், பிரதமர் மோடி முதல் அமித் ஷா உள்ளிட்ட சில அமைச்சர்கள் வரை தங்களது பாதுகாப்பு வாகனங்களைக் வெகுவாகக் குறைத்திருந்தனர்.
கடந்த வாரம் 3 ரூபாய் உயர்த்தப்பட்ட போதிலும், அது நிறுவனங்களின் ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் செலவை ஈடுகட்டப் போதுமானதாக இல்லை என்று பொருளாதார வல்லுநர்கள் தரப்பில் கூறப்படுகிறது. நேமுரா (Nomura) மற்றும் எலாரா கேபிடல் (Elara Capital) நிறுவனங்களின் கூட்டு ஆய்வு அறிக்கையின்படி, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விற்பனை மூலம் இந்திய ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய அரசு நிறுவனங்களுக்கு தினமும் 1,380 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்றும், இழப்பை சரிகட்ட பெட்ரோல் லிட்டருக்கு 25 ரூபாய் வரை உயர்த்தப்படலாம் என்று கூறியிருந்தது.
இந்தசூழலில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு படிப்படியாக உயர்த்திவருகிறது. கடந்த 2 வாரத்தில் மட்டும் இன்றுடன் 4வது முறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது பெட்ரோல் விலை ரூ.2.46 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ. 107.77க்கு விற்பனையாகிறது மற்றும் டீசல் விலை சென்னையில் ரூ.2.57 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ. 99.55க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுமேலும் அதிகமாகும் என்று தெரிகிறது, இருப்பினும் ஈரான் மற்றும் அமெரிக்காவின் போர் முடிவுக்கு வரும் அறிகுறி தென்படும் நிலையில் விரைவில் இப்பிரச்னைகள் சரிசெய்யப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 2 வாரத்தில் மட்டும் ரூபாய் 7.50 காசுகள் வரை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.