தமிழ்நாடு

ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை - நாளை முழு அடைப்பு போராட்டம்

ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை - நாளை முழு அடைப்பு போராட்டம்

rajakannan

பெட்ரோல், டீசல் விலை இன்றும் விலையேற்றம் கண்டுள்ளது. இந்த விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

சென்னையில் நேற்று 83 ரூபாய் 54 காசுகளுக்கு விற்பனையாகி வந்த ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று 12 காசுகள் விலை உயர்ந்து 83 ரூபாய் 66 காசுகளுக்கு விற்பனையாகி வருகிறது. நேற்று 76 ரூபாய் 64 காசுகளுக்கு விற்பனையான ஒரு லிட்டர் டீசல் 11 காசுகள் விலை உயர்ந்து தற்போது 76 ரூபாய் 75 காசுகளுக்கு விறபனையாகி வருகிறது. 

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், இறக்குமதிக்கான செலவு அதிகரித்து பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விலையேற்றத்தை தடுக்க கலால் வரியை குறைக்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்து உள்ளது. மாநில தலைநகரிலும், மாவட்ட தலைநகரங்களிலும் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி விடுத்த அழைப்புக்கு இடதுசாரி கட்சிகள், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.