ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்றம்த்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா என்ற மாணவி தன்னுடைய விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் பேராசிரியர்கள் கொடுத்த நெருக்கடியே என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
பாத்திமாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது தந்தை லத்தீஃப் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், தேசிய மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் உயநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கில் பல சந்தேகங்கள் இருக்கிறது. காவல்துறை ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாக பாத்திமாவின் தந்தை லத்தீஃப் பேட்டியளித்துள்ளார். எனவே பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ அல்லது தனி விசாரணை அமைப்பு விசாரிக்க வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.