தமிழ்நாடு

பிளக்ஸ் பேனர் வைக்க தமிழக அரசு அனுமதி வழங்கக்கோரி மனு..!

பிளக்ஸ் பேனர் வைக்க தமிழக அரசு அனுமதி வழங்கக்கோரி மனு..!

Rasus

பிளக்ஸ் பேனர் வைக்க தமிழக அரசு அனுமதி வழங்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ, பேனர் விழுந்து உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, பிளக்ஸ் வைப்பதற்கான கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. இத்தொழிலை நம்பி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உள்ள நிலையில், திருச்சியில் பிளக்ஸ் பேனர் தொழிலை நம்பி உள்ள 500-க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அதில் திருச்சி மாவட்டத்தில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பேனர் தொழிலை நம்பி உள்ளதால், அரசு, இப்பிரச்னையை தீர்க்க குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, “ தமிழகத்தில் ஏதோ ஒரு இடத்தில் நடந்த சம்பவத்தை கொண்டு தமிழகம் முழுவதும் தொழிலை தடை செய்வது மிக பரிதாபத்துக்குரியது. இத்தொழிலை நம்பி லட்சக்கணக்கானோர் ஈடுபடுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதை நம்பி இருக்கின்றன. எனவே, தமிழக அரசு ஒரு குழு அமைத்து தீர்வு காண வேண்டும்” எனத் தெரிவித்தார்.