அதிமுகவில் புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என சென்னை உயநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் அவிலிப்பட்டி சேர்ந்த வழக்கறிஞர் சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில், “கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுச்செயலாளர் பதவி உட்பட எந்த நிர்வாகிகளுக்கான தேர்தலும் நடத்தப்படவில்லை. தேர்தல் நடத்தாமல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சிக்கலும் ஏற்பட்டுள்ளது. இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தலைமை ஏற்காமல் கே.சி.பழனிசாமி, நயினார் நாகேந்திரன், செந்தில்பாலாஜி, வெற்றிவேல், தங்கத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் வெளியேறி உள்ளனர். அனைவரையும் கவரக்கூடிய ஒற்றை தலைமை இல்லாததால் கட்சியினரும், பொதுமக்களும் குழப்பத்தில் உள்ளனர்.
அதிமுக செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.