வேங்கைவயல் - மதுரை உயர்நீதிமன்ற கிளை
வேங்கைவயல் - மதுரை உயர்நீதிமன்ற கிளை PT Desk
தமிழ்நாடு

வேங்கைவயல் DNA பரிசோதனை: “பட்டியல் சமூகத்தினரை குற்றவாளிகளாக்க முயற்சி”- CBCID மீது பரபரப்பு புகார்!

PT WEB

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “வேங்கைவயல் கிராமத்தில் மூன்று தலைமுறைகளாக எங்கள் குடும்பம் வசித்து வருகிறது. தற்போது நான் அங்கு கள மேலாளராக பணியாற்றி வருகிறேன். நான் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவன். கடந்த 2022 டிசம்பர் 26ஆம் தேதி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் உள்ளிட்ட கழிவுகள் கலந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு விதமான தீண்டாமைகள் நடைபெற்று வரும் சூழலில், இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

வேங்கைவயல்
வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி துணை காவல் ஆய்வாளர், தவறு செய்தவர்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபடாமல், பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்களை குற்றவாளிகளாக்கவே தொடர்ச்சியாக முயல்கிறார்.
- என வேங்கைவயலில் பட்டியல் வகுப்பை சேர்ந்த ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு

மேலும் சிபிசிஐடி துணை காவல் ஆய்வாளர் விசாரணை என்னும் பெயரில், தொடர்ச்சியாக தொந்தரவும் செய்து வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக எனக்கும், இதில் எவ்விதத்திலும் தொடர்பு இல்லாத சுபா என்பவருக்கும் டிஎன்ஏ பரிசோதனைக்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது தனிநபரின் உரிமை மற்றும் சுதந்திரத்திற்கு எதிரானது.

வேங்கைவயலில் நடந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். ஆனால் சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் என் மீது குற்றம் சுமத்தும் நோக்கில் தொடர்ச்சியாக தொல்லை செய்து, மிரட்டி வருகிறார்.
என வேங்கைவயலில் பட்டியல் வகுப்பை சேர்ந்த ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு

குடிநீர் தொட்டியில் இருந்து மாதிரி எப்போது எடுக்கப்பட்டது? எவ்வளவு எடுக்கப்பட்டது? அதன் நிறம் உள்ளிட்ட விவரங்கள் முறையாக குறிப்பிடப்படவில்லை. DNA பரிசோதனைக்கு போதுமான அளவு மாதிரி கிடைத்ததா என்பதும் உறுதி செய்யப்படவில்லை.

டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்காக அழைக்கப்பட்ட 11 பேரில் 9 நபர்கள் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள். இது பாதிக்கப்பட்ட பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களையே, குற்றவாளிகளாக்க நடைபெறும் முயற்சியை உறுதிப்படுத்துகிறது.

மதுரை நீதிமன்றம்

குற்றம் உறுதி செய்யப்படாமல் தனி நபர்களை DNA பரிசோதனைக்கு கட்டாயப்படுத்துவது, தனி மனித உரிமைக்கு எதிரானது. மாதிரி சேகரிக்கப்பட்டது, DNA பரிசோதனை செய்வது போன்றவை வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறவில்லை.

ஆகவே DNA பரிசோதனை செய்வது தொடர்பாக புதுக்கோட்டை எஸ்.சி/எஸ்.டி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதோடு, என்னை DNA பரிசோதனைக்கு வருமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன், வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வேங்கைவயல் வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.