தமிழ்நாடு

வண்டலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிராக பொதுநல வழக்கு

வண்டலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிராக பொதுநல வழக்கு

webteam

சென்னையை அடுத்த வண்டலூர் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்படும் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் 44 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.393 கோடியில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் தமிழக முதலமைச்சர் பேருந்து நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில் இப்பேருந்து நிலையத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கஸ்தூரி எஸ்டேட்டிடம் இருந்து 95.74 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதை எதிர்த்து நரேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தொடர்ந்துள்ள பொதுநல மனுவில் புதிய பேருந்து நிலையத்துக்கு 2016ல் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் நிலத்தை ஏழைகளுக்கு கொடுக்காமல் பேருந்து நிலையத்துக்கு ஒதுக்குவது நில உச்சவரம்பு சட்டத்தை பாழாக்கும் எனவும் நில உச்சவரம்பின் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை பொதுப்பயன்பாட்டுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கட்டண மீட்டரை பொருத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது. இந்தப் பொதுநல மனு மீது பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது