சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கும்போது, டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை அண்ணனூரைச் சேர்ந்த மருத்துவர் லோகரங்கன் தாக்கல் செய்த மனுவில், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டருக்கான கட்டணத்துடன், அதை விநியோகிப்பதற்கான கட்டணமும் சேர்த்து ரசீதில் குறிப்பிடப்படும் நிலையில், சிலிண்டர்களை வீடுகளுக்கு டெலிவரி செய்பவர்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் தளங்களுக்கு ஏற்ப, 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையில் கட்டணத்தை வலுக்கட்டாயமாக வசூலிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் 23 கோடி வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளதாகவும், டெலிவரிக்கு என கூடுதல் கட்டணம் என்ற பெயரில் கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுவதாகவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். சிலிண்டர் டெலிவரி செய்பவர்கள் கூடுதல் பணம் வசூலிப்பது குறித்து ஆயிரக்கணக்கானவர்கள் புகார்கள் தெரிவித்தும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர்கள் டெலிவரிக்காக கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கும் உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.