தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் ,525 மெகாவாட் அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நெல்லை, சங்கர் நகரை சேர்ந்த முத்துராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு கிராமம் கோயில் பிள்ளை நகர் பகுதியில் தனியார் நிறுவனத்தின் சார்பில், 525 மெகாவாட் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக தூத்துக்குடி துறைமுகத்திற்கு சொந்தமான 36.9 ஹெக்டேர் நிலம் குத்தகை அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கடந்த 2010ல் பெறப்பட்டுள்ளது.
ஏற்கனவே தூத்துக்குடி துறைமுக பகுதியில் செயல்படும் மின்சார வாரிய, அனல் மின் நிலையத்தின் கூடுதல் யூனிட்டை துவக்குவதற்காக பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. பின்னர் இந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்த ஆவணங்களை கொடுத்து, தனியார் அனல்மின் திட்டத்திற்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்தியதாக அனுமதி பெற்றுள்ளனர்.
புதிய அனல்மின் நிலையத்தில் கிடைக்கும் சாம்பலை, ஸ்ரீவைகுண்டம் தாலுகா வடக்கு காரசேரி பகுதியில் குவிக்க உள்ளனர். இந்த பகுதி வல்லநாடு சரணாலய பகுதிக்கு அருகில் உள்ளது. எனவே, அப்பகுதி மக்களின் கருத்து கேட்பு கூட்டத்தை விதிப்படி நடத்தாததால், தனியார்(SPIC) அனல் மின்நிலைய திட்டத்திற்கான அனுமதியை ரத்து செய்யவும், கட்டுமான பணிகளுக்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், புகழேந்தி அமர்வு இதனை பொதுநல மனுவாக ஏற்க முடியாது எனக்கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.