தமிழ்நாடு

“மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும்” - உயர்நீதிமன்றத்தில் மனு

“மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும்” - உயர்நீதிமன்றத்தில் மனு

webteam

தமிழகத்தில் மதுபானக் கடைகளை திறப்பதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பொதுமுடக்கம் காரணமாக கடந்த 40 நாட்களுக்கு மேலாக மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் 7ஆம் தேதி தமிழகத்தில் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்றும், சென்னையில் தற்போது திறக்கப்படாது என்றும் அரசு அறிவித்துள்ளது. அத்துடன் சென்னையில் மதுபானக் கடைகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கொரோனா முழுமையாக இல்லாத நிலையை எட்டிய பிறகே மதுபானக் கடைகளை திறக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கூட்டம் கூடக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ள போதும், மதுக்கடைகள் திறக்கப்பட்ட மாநிலங்களில் தனிமனித இடைவெளி இல்லாமல் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று மதுவை வாங்கும் நிலை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகத்திலும் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாகவும், மதுபானக் கடைகளை அனுமதிப்பதன் மூலம் மீண்டும் குற்றச் சம்பவங்களும், விபத்துக்களும் அதிகரிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுபான விற்பனை என்பது அத்தியாவசிய நடவடிக்கை அல்ல என்றும், மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு முரணாக மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கும் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.