தமிழ்நாடு

ஜல்லிக்கட்டை தடை செய்ய பீட்டா மீண்டும் முயற்சி

Rasus

ஜல்லிக்கட்டுப் போட்டியை மீண்டும் தடை செய்ய உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என விலங்குகள் நல அமைப்பான பீட்டா மீண்டும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பீட்டா அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்த ஆண்டு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம்‌ ஆகிய இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது 8 பேர் இறந்துள்ளதாகவும், ஏராளமான வீரர்கள் மற்றும் காளைகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி முதல் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஆய்வு மேற்கொண்டதாக பீட்டா தெரிவித்துள்ளது. அதில், காளைகளை சுமார் 16 மணி நேரம் வரை வரிசையில் நிற்கவைத்து கொடுமைப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளது. எனவே, ஜல்லிக்கட்டுப் போட்டியை நிறுத்த உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என்று அந்த அறிக்கையில் பீட்டா தெரிவித்துள்‌ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக் கூடாது என பீட்டா உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக போராட்டம் வெடித்தது. அதனைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டிற்காக அவசர சட்டம் இயற்றப்பட்டு அதற்கு மத்திய அரசும் ஒப்புதல் கொடுத்தது. இதனையடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.