தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு வழக்கை விரைந்து நடத்த பீட்டா கோரிக்கை

ஜல்லிக்கட்டு வழக்கை விரைந்து நடத்த பீட்டா கோரிக்கை

webteam

ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணையை விரைந்து நடத்த உச்சநீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்க விலங்குகள் நல அமைப்பான பீட்டா முடிவு செய்துள்ளது.

பொங்கல் பண்டிகை வரும் ஜனவரியில் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணையை முடிக்க நீதிபதிகளிடம் முறையிட பீட்டா நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். ‌ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கில் அதை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு சிறப்பு சட்டத்தை இயற்றி மத்திய அரசிடம் அனுமதி பெற்றது. 

இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. இந்நிலையில் தமிழக அரசின் சிறப்பு சட்டத்தை எதிர்த்து பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அதை 5 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு சாசன அமர்வுக்கு மாற்றி கடந்த பிப்ரவரி 2ம் தேதி உத்தரவிட்டது. அதன்பின், வழக்கில் எவ்வித நகர்வுகளும் இல்லாத நிலையில் அதை விரைந்து முடிக்க பீட்டா கோரிக்கை விடுக்க உள்ளது.

முன்னதாக, கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மெரினா உட்பட தமிழகம் முழுவதும் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, பீட்டாவிற்கு எதிராக அதிக முழக்கங்கள் எழுப்பட்டிருந்தன. குறிப்பாக பீட்டா தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடப்பதைத் தடுத்து பாரம்பரிய மாடு இனங்களை முடக்க முயல்வதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். தமிழகத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தடை கேட்பது போல, கர்நாடகாவில் நடத்தப்படும் எருது பிடிக்கும் திருவிழாவிற்கும் பீட்டா தடை கோருவது குறிப்பிடத்தக்கது.