சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 12 வயது சிறுவனை வளர்ப்பு நாய் ஒன்று கடித்து குதறியது. தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் ரட்சதன் (12) தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தான் சிறுவன் நண்பரை பார்ப்பதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென வந்த வளர்ப்பு நாய் ரட்சதனின் தலை, முகம், கை, கால் உள்ளிட்ட இடங்களில் கடித்து குதறியது.
அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இது குறித்து ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.