தமிழ்நாடு

வெளி மாவட்டத்தில் இருந்து தேவர் குருபூஜைக்கு வர அனுமதி தேவை - மாவட்ட ஆட்சியர்

வெளி மாவட்டத்தில் இருந்து தேவர் குருபூஜைக்கு வர அனுமதி தேவை - மாவட்ட ஆட்சியர்

kaleelrahman

தேவர் குருபூஜைக்கு 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்கள் அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பசும்பொன்னில் பேட்டியளித்தார். 


ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் வருகிற அக்டோபர் 30-ஆம் தேதி முத்துராமலிங்க தேவரின் 113-வது ஜெயந்தி விழாவும், 58-வது குருபூஜை விழாவும் நடைபெற உள்ளதால் பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், கூடுதல் ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோர் பசும்பொன் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதில் காவல்துறை வருவாய்த்துறை மின்சாரத்துறை ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.


அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 8000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேவர் குருபூஜைக்கு வரும் நபர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

அரசு விதித்துள்ள விதிமுறைகள் படி முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஐந்து பேருக்கு மிகாமல் வருவது உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதேபோல வெளி மாவட்டத்தில் இருந்து தேவர் குருபூஜைக்கு வருபவர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.


இந்த மாதம் அக்டோபர் 28ஆம் தேதி ஆன்மிக விழாவும் 29ஆம் தேதி அரசியல் விழாவும் 30ஆம் தேதி அரசு விழா என மூன்று தினங்களில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.


இந்த நிகழ்ச்சியில் அதிமுக, திமுக, காங்கிரஸ், மதிமுக, பாமக, பாஜக, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூதாய தலைவர்கள் உள்ளிட்டோர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்திற்கு நேரில்வந்து தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளனர்.