கடந்த சில தினங்களுக்கு முன் ஃபெஞ்சல் புயலால் திருவண்ணாமலையில் வெவ்வேறு இடங்களில் 3 முறை மண் சரிவு ஏற்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் மலையில் பல இடங்களில் மண் அதிக ஈரப்பதத்துடன் இருப்பதால், மலை வழுவழுப்பாகவே காணப்பட்டது. இவற்றை கருத்தில்கொண்டு, வருகின்ற மகா கார்த்திகை அன்று மலை உச்சியில் மகா தீபம் ஏற்றபடுமா? மக்கள் கிரிவலம் செல்லமுடியுமா? என்று பல கேள்விகள் எழுந்தன. பலரும் அரசின் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அரசு சார்பாக, ஜியாலஜி கமிட்டியைச் சேர்ந்த சரவணப்பெருமாள் தலைமையிலான குழு ஒன்று மூன்று நாட்களாக மலையில் ஆய்வு மேற்கொண்டது. அவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்காக 350 கிலோ திரி கொண்ட கொப்பரைகள் 450 கிலோ நெய் உள்ளிட்ட தீபம் ஏற்றும் பொருட்கள் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படுகிறது. எந்த அசம்பாவிதமும் இல்லாமல் மலை உச்சிக்கு அவற்றை கொண்டுசென்று, தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு பேரவையில் இன்று தகவல் தெரிவித்தார்.
மேலும் கார்த்திகை மாத பௌர்ணமி, தீப திருவிழாவையொட்டி சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும் வரும் 13ம் தேதி முதல் 4 நாட்களுக்கு சுந்தர மகாலிங்கத்தை தரிசிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.