தமிழ்நாடு

ஒன்றரை மாதத்திற்கு பின் தொடங்கிய குற்றால சீசன்

webteam

ஒன்றரை மாதத்திற்கு பின் குற்றால சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் திழைத்துள்ளனர். 

கேரளாவை ஒட்டியுள்ள மேற்கு தொடர்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் தண்ணீர் வரத்து நேற்று மாலை முதல் அதிகரித்துள்ளது. ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க காவல் துறையினர் தடை விதித்தனர்.

இதைத்தொடர்ந்து இன்று காலை 5 மணி முதல் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகமாகக் காணப்பட்டது. திடீரென அதிகரித்த தண்ணீரால் குற்றாலம் மெயின் அருவியில், பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி தண்ணீர் கொட்டத் தொடங்கியது. இதனால் அங்கும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருந்தனர். 

இந்நிலையில் தற்போது தண்ணீர் வரத்து சீரானதால் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றரை மாதத்திற்கு பிறகு குற்றால சீசன் தொடங்கி குளிக்க முடிந்ததால் பயணிகள் குதூகலம் அடைந்துள்ளனர்.