தமிழ்நாடு

நடுக்குப்பத்தில் நிரந்தர மீன் சந்தை: முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

webteam

சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பொது ஏற்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் பகுதியில் நிரந்தர மீன்சந்தை அமைக்கப்படும் என முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உறுதியளித்தார்.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அறவழியில் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தின் கடைசி நாள் ஏற்பட்ட வன்முறையில் நடுக்குப்பம் பகுதியில் உள்ள மீன் சந்தை முற்றிலும் சேதமடைந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மீனவ மக்கள், பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மீன் சந்தை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இதையடுத்து கடந்த 28ம் தேதி வன்முறையால் பாதிக்கப்பட்ட மீன்சந்தை உள்ளிட்ட பகுதிகளை தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் நேரில் ஆய்வுசெய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மீனவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில், சட்டப்பேரவையில் வன்முறை குறித்து பேசிய முதலமைச்சர் பன்னீர்செல்வம் நடுக்குப்பம் பகுதியில் தற்காலிக மீன் சந்தை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி ஓரிரு நாட்களில் முடிவு பெரும். மேலும், அப்பகுதியில் மீனவ மக்கள் பயன்பெறும் வகையில் நிரந்தர மீன் சந்தை அமைத்து தரப்படும் எனக் கூறினார்.