(கோப்பு புகைப்படம்)
பேருந்து பயணிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் பணியாளர்கள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கிளை எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்து அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கல்லூரி மாணவியிடம் நடத்துநர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது போக்குவரத்துக் கழகத்துக்கு மாபெரும் தலை குனிவையும், களங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழக வரலாற்றில் இது ஒரு கருப்பு நிகழ்வு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளளது. இதுபோன்ற செயல்களை போக்குவரத்துக் கழக பணியாளர்கள் வரும் காலங்களில் அனுமதிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்திலிருந்து கோனூருக்கு சென்றுக் கொண்டிருந்த பேருந்தில், இரவு நேரத்தில் தனியாக பயணித்த கல்லூரி மாணவிக்கு நடத்துநர் சிலம்பரசன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு ஓட்டுநர் அன்புச்செல்வன் உடந்தையாக இருந்துள்ளார். இதுதொடர்பான புகார் உறுதிசெய்யப்பட்டதையடுத்து, நடத்துநரும், ஓட்டுநரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர், அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.