தமிழ்நாடு

நவீன மயமாகவுள்ள மதுரை பெரியார் பேருந்து நிலையம் !

நவீன மயமாகவுள்ள மதுரை பெரியார் பேருந்து நிலையம் !

webteam

தூங்கா நகரமான மதுரையின் அடையாளங்களில் ஒன்றான பெரியார் பேருந்துநிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கப்படவுள்ளது.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. நகரின் மையப்பகுதியில் இது அமைந்துள்ளது. மீனாட்சி பேருந்துநிலையம், சென்ட்ரல் பேருந்து நிலையம் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டு வந்த நிலையில், 1971ஆம் ஆண்டு முதல் பெரியார் பேருந்துநிலையமாக பெயர் மாற்றப்பட்டது. 


பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தற்போது, மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 157 கோடியே 70 லட்சம் மதிப்பில் பெரியார் பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் கட்டப்படவுள்ளது. வணிக வளாகத்துடன் கூடிய பேருந்துநிலையமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில், 4ஆயிரத்து 865 இருசக்கர வாகனங்கள் மற்றும் 350 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் தரை தளத்தின் கீழ் 2 அடுக்குகளில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படவுள்ளது. 

மேலும், ஒரே நேரத்தில் 64 பேருந்துகள் நிற்கும் வசதி, 429 கடைகள், பயணிகள் காத்திருப்பு பகுதி, லிப்ட், நகரும் படிக்கட்டுகள் என முழுவதும் நவீன வசதிகளுடன் பேருந்து நிலையம் கட்டப்படவுள்ளது. பெங்களூருவிலுள்ள மெஜஸ்டிக் பேருந்து நிலையம் போல் மேம்பாலத்துடன் இந்த பேருந்துநிலையம் அமையவுள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் “18 மாதங்களில் நவீன பெரியார் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்படும் என்றும், அதன் மூலம் நகரின் முக்கிய பிரச்னையான போக்குவரத்து நெரிசல் பெரிதும் குறையும்” என்று கூறினார்.

 பெரியார் பேருந்து நிலையத்தை மூடி, புதிய கட்டுமானத்திற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளன. அதனால், திருவள்ளூர் பேருந்து நிலையம், எல்லிஸ் நகர், திருப்பரங்குன்றம் சாலை, தெற்கு வெளிவீதி உள்ளிட்ட 4 இடங்களில் பேருந்துகளை நிறுத்த மாநகராட்சி மாற்று ஏற்பாடு செய்துள்ளது.