தமிழ்நாடு

பெரியகுளம்: சக்கர நாற்காலி வழங்காததால் தவழ்ந்துசென்று வாக்களித்த மாற்றுத்திறனாளிப் பெண்

sharpana

பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு சக்கர நாற்காலி வழங்காததால் தவழ்ந்து சென்று வாக்களித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்காக தனியாக சக்கர நாற்காலி ஏற்பாடு செய்து வைத்திருக்க வேண்டும் என்பது தேர்தல் விதிமுறை. ஆனால், பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட வடகரை பகுதியில் உள்ள 18வது வார்டு சுப்பிரமணிய சாவடியை தெருவில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வேல்மணி என்ற பெண் மாற்றுத்திறனாளி வந்தபோது சக்கர நாற்காலி வழங்காததால் தரையில் தவழ்ந்து சென்று தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினார்.

சர்க்கர நாற்காலி இல்லாமல் தவழ்ந்து சென்று வாக்களித்த பெண்ணிற்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உரிய தேர்தல் விதிமுறையின் படி சக்கர நாற்காலி வழங்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கேட்டபோது, சக்கர நாற்காலி தயார் நிலையில் இருந்தும் அதற்கான பணியாளர் அப்போது இல்லாத நிலையில் மாற்றுத்திறனாளி தவழ்ந்து சென்று வாக்களித்ததாக தெரிவித்தார்.