ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளனை கருணை அடிப்படையில் விடுதலை செய்யலாம் என்று இந்த வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன் கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் புதிய தலைமுறை செய்தியாளர்களிடம் பேசிய அவர், 26 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவத்திற்கு தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது என்றும், நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து சொல்வது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என்றும் தெரிவித்தார். மேலும் பேரறிவாளன் மன்னிப்பு கோரும் பட்சத்தில் அவர் விடுதலையை தான் ஆதரிப்பதாகவும் கார்த்தியேகன் தெரிவித்தார்.
ஆனால் பேரறிவாளன் தவறு செய்யவில்லை என்று கூறினால், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பே தவறு என்ற எண்ணம் தோன்றி விடும் என்பதால் அதனை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கார்த்தியேகன் தெரிவித்தார். மேலும் கருணை அடிப்படையில் பேரறிவாளன் விடுவிக்கப்பட்டால் தனக்கு மகிழ்ச்சி என்றும் சிபிஐ முன்னாள் இயக்குநர் கார்த்தியேகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.