தமிழ்நாடு

பரோல் முடிந்து சிறைக்கு திரும்பினார் பேரறிவாளன்

பரோல் முடிந்து சிறைக்கு திரும்பினார் பேரறிவாளன்

Rasus

ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளன், 2 மாத கால பரோல் முடிவடைந்து இன்று மீண்டும் சிறைக்கு திரும்பினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தந்தைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், அருகே இருந்து கவனித்துக்கொள்ள தனக்கு ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பேரறிவாளன் கோரிக்கை விடுத்தார்.

இதனையேற்று கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி பேரறிவாளனுக்கு ஒரு மாத கால பரோல் வழங்கப்பட்டது. இதனையடுத்து 26 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பிறகு அன்றைய தினமே சிறையிலிருந்து வெளிவந்த பேரறிவாளன், ஜோலார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் தங்கி வந்தார். ஒரு மாத கால பரோல் செப்டம்பர் 24-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் மேலும் ஒரு மாதத்திற்கு பரோலை நீட்டிக்க வேண்டும் என பேரறிவாளனின் தயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். அதனையேற்று ஒரு மாத காலத்திற்கு பரோல் நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையே, 2 மாத பரோல் காலம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைவதால் அதற்கு முன்பாக அவர் வேலூர் மத்திய சிறைக்கு திரும்பியாக வேண்டும். எனவே ஜோலார்பேட்டை வீட்டிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன் சிறைக்கு திரும்பியுள்ளார்.